மே 3. இன்றைய நாள் இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நாள்..
இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா 1913-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கபடும் தாதா சாஹேப் பால்கே தனது சொந்தத் தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட இப்படம் ஒரு ஊமை படமாக இருந்தபோதிலும் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய அளவுக்கு 4 ரீல்களில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதில் நடித்தவர்களில் பெரும்பாலோர் மராத்தி நாடக நடிகர்கள். அந்த வரிசையில் இது முதல் மராத்தி படமும்கூட.
இது ஊமை படம் என்றாலும் சில இடங்களில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சப் டைட்டில்களைகூட அமைத்திருந்தார் பால்கே.. அதனால் உண்மையாகவே ஒரு கற்பனையில்கூட நினைத்திராத ஒரு உலகத்தை இந்தப் படம் அந்தக் காலத்திய ரசிகர்களுக்குக் காட்டியிருக்கும்..
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் படத்தின் பிரிண்ட்டில் முதல் ரீலும், கடைசி ரீலும் மட்டுமே புனேயில் உள்ள திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.. இரண்டு, மற்றும் மூன்றாவது ரீல்கள் கிடைக்கவில்லையாம்.
இந்திய சினிமாவின் துவக்கப் புள்ளியான இன்றைய நாளில் ராஜா ஹரிச்சந்திராவையும், தாதா சாஹேப் பால்கேவையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டியது இந்திய திரையுலகத்தின் கடமை..!
0 Comments